"கஜா' புயல்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பில்லை: அமைச்சர் எம்.மணிகண்டன்

கஜா புயலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பில்லை என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கஜா புயலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பில்லை என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
    கஜா புயல் காரணமாக, தனுஷ்கோடி முந்தல்முனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பு கருதி, வியாழக்கிழமை வருவாய்த் துறையினர் அழைத்து வந்தனர். இதில், 28 குடும்பங்களைச் சேர்ந்த 22 பெண்கள், 30 குழந்தைகள் உள்பட மொத்தம் 72 பேரை, கரையூர் மீனவ கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டன.
    இந்நிலையில், முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம். மணிகண்டன், 28 குடும்பத்துக்கும் தலா 10 கிலோ அரிசி, சேலை, வேட்டி, பாய் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
    இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சுமன், ராமேசுவரம் வட்டாட்சியர் சந்திரன், மீன்வளத் துறை அதிகாரிகள் காத்தவராயன், கோபிநாத், மணிகண்டன், துணை வட்டாட்சியர் அப்துல் ஜாபர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
    பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக செய்யப்பட்டதற்கு, மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இயல்பு நிலை திரும்பிவிட்டதால், மாவட்டம் முழுவதுமுள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 560 குடும்பங்களைச் சேர்ந்த 2,123 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
    தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிர்க் கட்சிகளும் பாராட்டும் அளவுக்கு உள்ளது. கஜா புயலால் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com