வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன ஊழியர்கள் 15 நாள்களாக தொடர் போராட்டம்

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி

சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்காததைக் கண்டித்து, 15 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்துடன் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லையாம். இது தொடர்பாக நிறுவன மேலாளரிடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 
    உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சென்னையிலிருந்து உப்பு நிறுவனத்துக்கு வந்திருந்தபோது, தொழிலாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டாராம். இது, தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
     இதனால், மேலாண்மை இயக்குநரைக் கண்டித்தும், அவரை இடமாற்றம் செய்யக் கோரியும், உடனடியாக அக்டோபர் மாதச் சம்பளத்துடன் போனஸும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, அலுவலகம் முன்பாக தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், பூட்டுப் போடும் போராட்டம், தீபாவளி அன்று தொழிலாளர்களின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் என கடந்த 15 நாள்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
   இதனிடையே, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் முன்னிலையில், சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்குவது சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குச் செல்லாமல் நிறுவனத்தின் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் இதுவரை முன்வரவில்லை. 
    இப்போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலர் எம். சிவாஜி தலைமை வகித்தார். தலைவர் கே. பச்சமாள், செயலர் குமரவடிவேல், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் ராமு, ராஜேந்திரன், காட்டுராஜா மற்றும் பெண்கள் என 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.    இதையொட்டி, வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தின் நுழைவுவாயில் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com