கடலாடி மீனவர்கள்  காதில் பூ சுற்றி ஆட்சியரிடம் மனு

வெளிமாவட்ட மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க ஆட்சியர்

வெளிமாவட்ட மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க ஆட்சியர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தக் கோரியும், காதில் பூ சுற்றியபடி கடலாடி பகுதி மீனவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் திங்கள்கிழமை ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடலாடி வட்டம் மேலமுந்தல், கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் எஸ். செந்தில்குமார் தலைமையில், காதில் பூச்சுற்றியபடி மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: கடலாடி வட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறோம். ஆனால், எங்களது தொழிலை குலைக்கும் வகையில் வியாபாரிகள் சிலர் கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட பகுதி மீனவர்களை விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க அனுமதித்து வருகின்றனர். 
இது தொடர்பாக ஏற்கெனவே பிரச்னை எழுந்ததால், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், வெளிமாவட்ட மீனவர்கள் கடலாடி பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மீன்வளத் துறையினர் ஆட்சியர் அலுவலக உத்தரவை மீறி, வெளி மாவட்ட மீனவர்களுக்கு  அனுமதி அளித்து வருகின்றனர். 
போலி ஆவணங்கள் மூலம் மீன்பிடித்தலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள் மற்றும் படகுகுகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள்: மாலங்குடி கிராமத்து கண்மாய்க்கு வரும் வரத்துக் கால்வாயை மல்லல் கிராமத்து மக்கள் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மனு அளித்துச் சென்றனர். 
   சக்கரக்கோட்டை ஊராட்சி மஞ்சனமாரியம்மன் கோயில் தெருவைச்  சேர்ந்த அனுசுயா என்ற பெண் தனது குழந்தைகளுடன் வந்து, சவூதி அரேபியாவில் உள்ள கணவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும்,  அவர் எங்கு உள்ளார் என்ற விவரமும் தெரியவில்லை என்றும், தனது கணவரை மீட்டுத் தர உதவிடவேண்டும் என்றும் ஆட்சியரிடம் மனு அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com