ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வழங்காவிட்டால் சாலை மறியல்: விவசாயிகள் எச்சரிக்கை

விதிமுறைப்படி ராமநதாபுரம் பெரிய கண்மாய்க்கான வைகை தண்ணீரை வழங்கா விட்டால், மறியல் போராட்டம்

விதிமுறைப்படி ராமநதாபுரம் பெரிய கண்மாய்க்கான வைகை தண்ணீரை வழங்கா விட்டால், மறியல் போராட்டம் நடத்தப்படும் என ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ரா. பாலசுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது கடைமடைப் பகுதி கண்மாயான ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு முதலில் தண்ணீர் வழங்கவேண்டும் என்பது அணையின் கட்டுமான சட்ட விதிமுறையாகும். 
ஆனால், தற்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இல்லாததால், மடைகள் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயம் செய்யப்பட்ட 50 சதவிகிதப் பகுதியில் மானாவாரி பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரின்றி பாசனப் பரப்பில் 50 சதவிகிதம் பகுதி இன்னும் விவசாயம் செய்யாமலே உள்ளது. 
கண்மாயில் 6 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பினால், விவசாயத்துக்குப் போக மீதமுள்ள தண்ணீரை ராமநாதபுரம் நகருக்கான தேவைக்கும், சுற்றுப்புற பகுதி கிராமக் கண்மாய்களுக்கும், ஊருணிகளுக்கும் பயன்படுத்தமுடியும். 
எனவே, பெரிய கண்மாய்க்கு விதிமுறைப்படி தண்ணீரை வழங்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுக்கவேண்டும். இல்லையெனில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், பெரிய கண்மாய்க்கான தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்மாய்க்கு ஓரிரு நாள்களில் தண்ணீர் வந்து சேரும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com