ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கோயில்களில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள  கோயில்களில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள  கோயில்களில் நவராத்திரி திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில்... நவராத்திரி திருவிழா புதன்கிழமை காலையில் காப்புக்கட்டுதல் உற்சவத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் உள்ள தர்மதாவள விநாயகர் கோயில் மண்டபத்தில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 2  ஆவது நாளாக வியாழக்கிழமை முத்தாலம்மன் துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பரமக்குடி ஜனனி மன்ற குழுவினரின் கதம்ப கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரும் 19 ஆம் தேதி மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் அம்மன் மகர்நோன்பு பொட்டலில் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சௌபாக்கிய நாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயில்..நவராத்திரி விழா புதன்கிழமை காப்புக் கட்டுதல் உற்சவத்துடன் தொடங்கியது. இவ் விழா வரும் 19 ஆம் தேதியுடன்  நிறைவு  பெறுகிறது. ஆலயத்தில்  தினசரி  இரவு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.19 ஆம் தேதி ஆலயத்திலிருந்து முருகப்பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடாகி மகர்நோன்பு பொட்டலில் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் நவராத்திரி விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில்...  நவராத்திரிக் கலைத் திருவிழா கடந்த 9 ஆம் தேதி மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது.கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேசுவர சுவாமிகள் விழாவை தொடங்கி வைத்தார். அக். 10, 11 ஆகிய தேதிகளில் அரண்மனை வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
தினசரி அரண்மனை வளாகத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும் 19 ஆம் தேதி அம்மன் தங்கச்சிங்க வாகனத்தில் மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் மகர்நோன்பு பொட்டலுக்கு எழுந்தருளும் போது ராமநாதபுரம் நகரில் உள்ள 15- க்கும் மேற்பட்ட கோயிலைச் சேர்ந்த தெய்வங்களும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து வன்னிகாசூரனை வதம் செய்யும்  நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
ராமநாதபுரம் ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார் தலைமையில் கோயில் சமஸ்தானத்தின் நிர்வாக செயலாளர் கே.பழனிவேல்பாண்டியன், செயல் அலுவலர் எம்.ராமு ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு நவராத்திரி திருவிழா புதன்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. அம்பாள் சன்னத்தியில் உள்ள கொலு மண்டபத்தில் ஏராள பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்திரி கொலு தொடங்கியது. புதன்கிழமை முதல் நாளான்று அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.  இதனையடுத்து, அக்னி தீர்த்தக்கரையில் உள்ள உஜ்ஜையினி அம்பாள் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. இதே போன்று பத்திரகாளியம்மள், நம்புநாயகி அம்மன், தூக்கையம்மன், முத்துமாரியம்மன், என்ஸ்.கே. வீதியில் உள்ள ஸ்ரீதர்ம முனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் திருவிழா தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளிலுள்ள கோயில்களில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.
மானாமதுரை புரட்சியார்பேட்டையில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் கொலு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் எழுந்தருளி வீதி உலா வந்தார். 
வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் யாகசாலை மண்டபத்தில் கொலு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மானாமதுரை பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கோயிலிகளிலும் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் தினமும் உற்சவர் சௌந்திரநாயகி அம்மன் பல அலங்காரங்களில் எழுந்தருளுகிறார்.
நரிக்குடி விலக்கு பகுதியில் அமைந்துள்ள மணிமந்திர விநாயகர் கோயிலில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விழா நாள்களில் தினமும்  இரவு வெவ்வேறு அலங்காரங்களில் விநாயகர் எழுந்தருள்கிறார்.
இதே போன்று இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொலுவை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com