அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என,  ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையில், ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி சி. முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கெட்ஸி. லீமா அமாலினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர்(கட்டடம்) குருதிவேல்மாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகிய இருவரையும், சிறப்பாகச் செயல்பட்டமைக்காக ஆட்சியர் பாராட்டினார்.
அதையடுத்து, ஆட்சியர் பேசியதாவது: மத்திய அரசின் சார்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி  முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தூய்மை பாரத இயக்கம் தொடர்பான பணிகள் நடைபெறுகின்றன. 
எனவே, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குப்பைகள் சேராமல் இருக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில், மாணவர்கள் தங்கியிருக்கும் அரசு விடுதிகளும் அடங்கும்.  இதில் சிறப்பாகச் செயல்படும்  அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அந்த விவரம் பணிப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படும்.
அதேபோல், அதிகாரிகள் எக்காரணத்தை முன்னிட்டும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. எங்கு சென்றாலும் துணிப் பைகளைத்தான் கொண்டு செல்லவேண்டும் எனக் கூறியதுடன், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த அனைத்து அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்களுக்கு மாதிரி துணிப்பை ஒன்றை ஆட்சியர் வழங்கினார். 
அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பது தெரியவந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்தார்.     இக்கட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com