ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில்  அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில்  அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
     திருப்புவனம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பத்ரகாளியம்மனை தரிசனம் செய்தனர்.பெண்கள் மாவிளக்கு, எலுமிச்சை, நெய் விளக்கேற்றி வைத்து  வேண்டுதல் நிறைவேற்றினர்.
   பல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மடப்புரத்துக்கு மதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இங்குள்ள புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இளையான்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.  அதன்பின் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாரியம்மனை தரிசிக்க திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.பெண்கள் மாவிளக்கு, எலுமிச்சை, நெய் விளக்கேற்றி வைத்து வேண்டுதல் நிறைவேற்றி வழிபட்டனர்.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உற்சவருக்கும் மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி ஆனந்தவல்லி அம்மன் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பெண்கள் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இங்குள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி தீபாரதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி பிரசாதம் வழங்கப்பட்டது. மேல்கரை பகுதியில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் பூஜை விழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாரதனைகள் நடைபெற்றது. ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு உச்சிமாகாளியம்மனை தரிசித்தனர்.
 மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள ஏரளமான அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
   அம்மனுக்கு தைலம்,திருமஞ்சனம், பால்,இளநீர்,சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    அதனைத் தொடர்ந்து, அன்ன வாகனத்தில்,வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு விஷேச, தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில்,சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.  அவர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.
.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com