அழகப்பா பல்கலை.யில் புவி அறிவியல் துறை துவக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக புவி அறிவியல் துறை துவங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக புவி அறிவியல் துறை துவங்கப்பட்டுள்ளது.
  இத்துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து புவியியல் அறிஞரும், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தற்போதுஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சோம.  ராமசாமி கூறியதாவது: 
புவி அறிவியல் துறை மகத்துவமிக்கது. விண்வெளிசார் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளில் இந்திய புவித்தட்டை  6500 கிலோ மீட்டர் வடக்கே தள்ளிய அழுத்த சக்தி இன்றும் வலுவாக உள்ளது.
     அந்த சக்தி இந்தியத் தட்டை வடக்கே தள்ளுவதை இமயமலை நகர விடாமல் தடுக்கிறது. இதனால், இந்திய தட்டு மண்புழுபோல் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே இமய மலையின் அடிவாரம் வரை பெரிய மேடுகளாகவும், பள்ளங்களாவும் மாறிமாறி உருவாகி வருகின்றன. 
     புவியியல் சக்தியால் இந்தியாவின் பல பகுதிகளில் மிகப்பெரிய அளவில் நிலம், நதிகள், கடலோரம், நிலத்தடி நீர் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கீழே நதிகள் புதையுண்டு இருப்பதும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இதுபோன்ற நிலஅசைவுகள், நதிகளின் செயல்பாடுகள் மற்றும் கடலோர நீரோட்டச் சக்திகள் ஆகியன இணைந்து, இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளை உருவாக்குவதோடு அவற் றின் இயற்கை வளங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே புதிதாக துவங்கப்பட்ட புவி அறிவியல் துறையானது இச்செயல்களை ஆராய்ந்து, அவற்றின் மூலம் புதிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
     மேலும், புவி அறிவியல் துறை மற்ற துறைகளுடன் இணைந்து, தமிழகக்தின் கடலோர நாகரிகம், கடல் கோள்களால் அழிந்த துறைமுக நகரங்களையும், குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்ளும். 
பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, கடலரிப்பு ஆகியவற்றைப் பற்றியும், அவற்றின் எச் சங்களை கடந்த 10,000 ஆண்டுகள் முதல் ஆராய்ந்து அவற்றின் மூலம் இப்பேரிடர்களை ஆய்வதோடு, முன்னறிவிப்புகளையும் இத்துறை உருவாக்கும். கிராமப்புறம்சார் புவித்தகவல் அமைப்பியலிலும் பெரும் பங்காற்றவும் திட்டமிடப்படும்.
சிறப்புவாய்ந்த இத்துறையை பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் சொ. சுப்பையா, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்கவேண்டும் என்ற தொலைநோக்குடன் துவங்கியுள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com