காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்பு இல்லை: குடிநீருக்குத் தவிக்கும் கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படாததால் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படாததால் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் இளையான்குடி ஒன்றியப்பகுதி கிராமங்களில்  குடிதண்ணீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
   கடந்த திமுக ஆட்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திருச்சியில் காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிதண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இத் திட்டத்தின் மூலம்  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் 50 கிராமங்களில் குடிதண்ணீர் விநியோகம் நடந்து வருகிறது. 
இக் குடிநீர் திட்ட குழாய்களிலிருந்து அந்தந்த பகுதி கிராமங்களில் நேரடி குழாய் இணைப்பு மூலமும் மேல்நிலைத் தொட்டி அமைத்து அதில் தண்ணீரை ஏற்றியும் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. மேலும் ஆங்காங்கு திட்டத்துக்கான குழாய்களிலிருந்து கசியும் தண்ணீரையும் அந்தந்த பகுதி கிராம மக்கள் சேகரித்துச் சென்று பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படாததாலும் அதற்காக தனியாக பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததாலும் இளையான்குடி ஒன்றியத்தில் இத் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராம மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
   இது குறித்து இளையான்குடி ஒன்றிய திமுக செயலாளரும் இத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வுமான சுப.மதியரசன் கூறியதாவது:    
    கடந்த திமுக ஆட்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலனடையும் வகையில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இளையான்குடி ஒன்றிய கிராம மக்களும் பலனடையும் வகையில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப்பின் சிவகங்கை மாவட்டத்தில்
இத்திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கப்படாததால் இத் திட்டத்துக்காக சாலையோரங்களில்  குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கருவேல் மரங்கள் வளர்ந்து அதன் வேர்கள் குழாய்களை சேதப்படுத்தி அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் இக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் பம்பிங் செய்யும்போது தண்ணீர் செல்லும் வழியில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. 
எனவே தமிழக அரசு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிக்கு என தனியாக ஊழியர்களை நியமித்து இளையான்குடி ஒன்றிய பகுதி 
மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்கச் செய்திட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com