இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிவகங்கை வைகை ஆற்றில் தண்ணீர்

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கடந்த சில தினங்களுக்கு முன் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புதன்கிழமை நள்ளிரவு

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கடந்த சில தினங்களுக்கு முன் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் புதன்கிழமை நள்ளிரவு சிவகங்கை மாவட்டத்தை அடைந்ததால்,  பொதுமக்களும், விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்தனர். 
       தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், வறட்சி நிலையே காணப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால், கடந்த சில வாரங்களாக மூல வைகை அணைப் பகுதி, தேனி,திண்டுக்கல், வருசநாடு ஆகிய பகுதிகளிலும்,  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக,  வைகை அணையின் நீர்மட்டம் படிபடியாக  உயர்ந்து  60 அடியை எட்டியுள்ளது. 
    எனவே, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாசனம் மற்றும் குடிநீர் வசதிக்காக வைகை அணையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில்  உள்ள வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறவும், குடிநீர் தேவைக்காகவும் விநாடிக்கு 4,860 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது.
      கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களைக் கடந்து புதன்கிழமை நள்ளிரவு சிவகங்கை மாவட்ட எல்லையான சிலைமான் பகுதியை வந்தடைந்தது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகை ஆற்றில் தண்ணீர் வந்தததால், ஆற்றங்கரையோரப்  பகுதியான மணலூர், கழுகேர்கடை, தட்டான்குளம்,திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், ராஜகம்பீரம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வடையும் என்ற நம்பிக்கையில் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.      இவை தவிர, வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முறையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக,  வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மதகு அணை, படுகை அணை பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com