குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மனு

இளையான்குடி அ.மெய்யனேந்தல் மற்றும் தெற்குத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கோரி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.

இளையான்குடி அ.மெய்யனேந்தல் மற்றும் தெற்குத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கோரி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.இதில்,  இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அ.மெய்யனேந்தல் ஊராட்சியைச் சேர்ந்த பொதுக்கள் அளித்த மனு விவரம்: இளையான்குடி ஒன்றியம் அ.மெய்யனேந்தல் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடும் வறட்சி காரணமாக எங்கள் கிராமத்திலும்,சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து 3 நாளுக்கு ஒரு முறை வரும் தண்ணீரும் எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்வதில்லை.
லாரியை வரவழைத்து ஒரு குடம் தண்ணீர் ரூ. 10 விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இதனைக் கவனத்தில் கொண்டு எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, இளையான்குடி அருகே உள்ள தெற்குத்தெரு கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மனு அளிக்க வந்திருந்தனர்.
காளக்கண்மாய் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: காளையார்கோவில் அருகே  உள்ள காளக்கண்மாய் கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றோம்.
    எங்கள் கிராமத்திற்கு அருகே  சில ஆண்டுகளுக்கு முன்னர்  தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இங்கு தினசரி நிலத்தடியிலிருந்து  பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பாட்டில், பாக்கெட் களில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
     இதன்காரணமாக,அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம்  குறைந்து அவதிக்குள்ளாகி உள்ளோம்.  எனவே தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com