பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கைகள் ஏமாற்றமளிக்கின்றன: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக, சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, இனிவரும் கல்வியாண்டுகளில் மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்கள் நடத்துவது, புத்தகக் கண்காட்சி நடத்துவது, மாணவர் கலைத் திருவிழா நடத்துவது, கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என வெளியிடப்பட்ட அரசாணைகள் பாராட்டதலுக்குரியனவாகும்.
   அதையடுத்து, பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை அடைய தேவையான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.   கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஆசிரியர்-மாணவர் விகிதத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் நோக்கில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தொடக்கப் பள்ளி நிலையில் இருந்து மேல்நிலைப் பள்ளி வரை அதிகமான எண்ணிக்கையில் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 4,084 காலிப்பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு பொதுக் கல்வியில் அரசினுடைய பங்களிப்பு வருத்தமளிப்பதாக உள்ளது.
    சமச்சீர் கல்வியை தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் செயல்வழிக் கற்றல் அமல்படுத்தாமல் இருப்பது, பகுதி நேர கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்காதது, மாணவர்களை விளையாட்டு மற்றும் கணினி அறிவியல் துறையில் சாதனையாளராக மாற்றும் வகையில் கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாதது, தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியிலும், பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com