ஆற்றில் பள்ளம் தோண்டி தண்ணீர் தேடும் 4 கிராம மக்கள்: திருப்பத்தூர் அருகே நீடிக்கும் அவலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிராமணம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 4 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆற்றில் பள்ளம் தோண்டி ஊற்றுக்காக பலமணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிராமணம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 4 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆற்றில் பள்ளம் தோண்டி ஊற்றுக்காக பலமணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது.
மேலையான்பட்டி, கீழையான்பட்டி, சோலுடையான்பட்டி, சாமந்தபட்டி ஆகிய கிராமங்களில் ஆழ்துளைக்கிணறு தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால் சமையலுக்கும் குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் இக்கிராமங்களில் இருந்து பெண்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதிக்குச் செல்கின்றனர்.
ஆற்றில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி அதில் ஊறும் நீரை பலமணி நேரம் காத்திருந்து சேகரித்துக் கொண்டுவருகின்றனர். காட்டுப் பகுதிக்குள் ஆற்றிற்குச் செல்வதால் பலவித அச்சுறுத்தலுக்கும் பெண்கள் ஆளாகின்றனர்.
 இக்கிராம மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை பல மனுக்கள் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் குடிநீருக்கு மணிமுத்தாற்றில் தோண்டப்படும் ஊற்றுப் பள்ளங்களையே நம்பி வாழ்கிறார்கள்.   
 கோடைகாலம் ஆரம்பித்து விட்ட நிலையில் இன்னும் சில நாள்களில் தண்ணீர் ஊற்று குறைந்துவிடுமோ என்ற அச்சத்துடன் தண்ணீரை சேகரிக்கின்றனர். தண்ணீருக்காக வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையிலும் மக்கள் உள்ளனர்.
குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய வழிமுறையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என இக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com