அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு நடைபெறுவதாக, ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு நடைபெறுவதாக, ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மூலம், அந்தந்த ஒன்றியத்துக்குள்பட்ட அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் தினந்தோறும் 10 இடங்களில் (எண்ணிக்கையைப் பொருத்து வட்டத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களில்) 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு நடைபெற உள்ளது. மேலும், சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழை (அசல்) எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆதார் பதிவு செய்து கொள்ளலாம். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்த உடனேயே பெற்றோரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வரும்.
குறுஞ்செய்தி கிடைத்த 3 நாள்களுக்குப் பின்னர், குறுஞ்செய்தியில் வரப்பெற்ற பதிவு எண்ணைக் கொண்டு இணையதளத்தில் குழந்தையின் ஆதார் அட்டையை நகல் எடுத்துக் கொள்ளலாம்.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு புகைப்படம் மட்டுமே எடுக்கப்படுகிறது. கருவிழியோ, கைவிரல் ரேகையோ பதிவு செய்வதில்லை என்பதால், வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் நிரந்தர ஆதார் பதிவு மையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டியதில்லை. அந்தந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களிலேயே பதிந்து கொள்ளலாம்.
இவை தவிர, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக, மற்ற அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஆதார் பதிவு செய்யும் நிரந்தர சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிரந்தர மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com