காரைக்குடி அருகே மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சமைத்துச் சாப்பிட்டு தொடர் போராட்டம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம், மித்திராவயல் ஊராட்சிப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, பெண்கள் சனிக்கிழமையும் சமைத்துச் சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம், மித்திராவயல் ஊராட்சிப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, பெண்கள் சனிக்கிழமையும் சமைத்துச் சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மித்திராவயல் ஊராட்சியில் அரசு மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், ஒரேயொரு கடை மட்டும் அகற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையையும் அகற்றவேண்டும் எனக் கோரி, மித்திராவயல், ஆவணம், வேதியங்குடி, திருத்தங்கூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மதுபானக் கடையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் குணசேகரன், சாக்கோட்டை ஒன்றியச் செயலர் பாண்டித்துரை, மாவட்டக் குழு உறுப்பினர் சிதம்பரம், மாதர் சங்க மாவட்டச் செயலர் கண்ணகி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மூடப்பட்ட கடையை திறக்க அனுமதிக்கவே முடியாது என்று பெண்கள் கூறினர். அதைத் தொடர்ந்து மாலை வரை அங்கிருந்த வட்டாட்சியர் திரும்பிச் சென்றார்.
வெள்ளிக்கிழமை இரவும் போராட்டம் தொடர்ந்ததால், அங்கேயே பெண்கள் சமைத்துச் சாப்பிட்டனர். சனிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
பெண்களின் இப்போராட்டத்துக்கு அப்பகுதியில் ஆதரவு பெருகி வருவதால், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் இதில் கலந்துகொள்ள வந்தவண்ணம் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com