காரைக்குடியில்  மாதங்களாக மூடிக்கிடக்கும் நகராட்சி பயணியர் விடுதி

காரைக்குடியில் திறப்பு விழா நடந்து, 8 மாதங்களைக் கடந்தும் நகராட்சி பயணியர் விடுதி பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.

காரைக்குடியில் திறப்பு விழா நடந்து, 8 மாதங்களைக் கடந்தும் நகராட்சி பயணியர் விடுதி பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், காரைக்குடியை மையமாக வைத்து பல்வேறு ஆன்மீகத் தலங்களும், செட்டிநாடு பாரம்பரியச் சுற்றுலாத் தலமும் உள்ளன.
 சென்னை மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து பணி நிமித்தமாக நகருக்கு வருகை தரும் அரசு அதிகாரிகள், அரசியல் முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்காக காரைக்குடியில் நகராட்சிப் பயணியர் விடுதி கட்டுவதற்காக கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
 அப்போது காரைக்குடி சட்டப் பேரவைத்தொகுதி உறுப்பினராக இருந்த என். சுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 லட்சம் நிதி வழங்கினார்.
  இந்நிதியைக் கொண்டு காரைக்குடி நகராட்சி 8-ஆவது வார்டு பகுதியான சுப்பிரமணியபுரம் 7-ஆவது வீதி தெற்குப் பகுதியில் பயணியர் விடுதி கட்டப்பட்டது. அதில் கீழ்த் தளத்தில் 2 அறைகள், மேல்தளத்தில் 2 அறைகள் கட்டப்பட்டன.  
 அதன்பிறகு சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கிய நிதியுடன் சேர்த்து ரூ.69.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் விடுதி கட்டி முடிக்கப்பட்டது.
 இதையடுத்து கடந்த 2016 செப்.24 இல் பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி. முன்னிலையில் அப்போதைய நகர்மன்றத் தலைவரான (பொறுப்பு) சோ. மெய்யப்பன் பயணியர் விடுதியைத் திறந்து வைத்தார்.  ஆனால், திறப்பு விழா நடந்து 8 மாதங்களைக் கடந்த பின்னரும் பயணியர் விடுதி பயன்படுத்தப்படாமலேயே உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்தபோது, கட்டடம் திறக்கப்பட்டாலும் இன்னும் கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வரவில்லை என தெரியவந்தது.
  அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அரசு அதிகாரிகள், அரசியல் முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்கான பயணியர் விடுதியின் கட்டுமானப் பணி மந்த நிலையில் நடைபெறுகிறது. விரைவாக பணிகளை முடித்து பயணியர் விடுதியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
  இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: நகராட்சிப் பயணியர் விடுதியில் தரைத் தளத்தில் 2 அறைகளும்,முதல் தளத்தில் 2 அறைகளும் உள்ளன. நான்கு அறைகளிலும் தற்போது உள்ளே தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தங்கும் அறைகளுக்கு வேண்டிய கட்டில் உள்ளிட்ட மற்ற பொருள்கள் வந்துவிட்டன.
  பணிமுடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com