ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தர்
By DIN | Published on : 15th November 2017 08:55 AM | அ+அ அ- |
ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதன் நேரு கல்வி மையம், ஐ.எல்.எப்.எஸ் திறன்வளர்ப்பு நிறுவனம் ஆகியவை சார்பில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அவர்களின் முக்கிய கடைமையாகும். மாணவர்களின் பயத்தைப்போக்க வேண்டும் அத்துடன் அவர்களது அச்சத்தை போக்கி எப்போதும் ஊக்கப்படுத்தவேண்டும். இலவசக் கல்வி பெற ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமையுள்ளது. இதனை நமது அரசாங்கம் வழங்க அனைத்துவிதத்திலும் முயற்சி செய்கிறது. பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில், சாகித்ய அகாதெமி முன்னாள் உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசுகையில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாமல் அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டாட வேண்டும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களை சரியான வழியில் நடத்துவதே ஆசிரியர்களின் கடைமையாகும் என்றார்.
விழாவில், அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எ. நாராயணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக நேரு கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் யோகலெட்சுமி வரவேற்றுப் பேசினார். திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பி. தர்மலிங்கம் நன்றி கூறினார்.