அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மானாமதுரை ரயில் நிலையம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் முக்கிய சந்திப்பாக திகழும் மானாமதுரை ரயில் நிலையம் அடிப்படை வசதிகளின்றி காணப்படுகிறது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் முக்கிய சந்திப்பாக திகழும் மானாமதுரை ரயில் நிலையம் அடிப்படை வசதிகளின்றி காணப்படுகிறது.
பிளாட்பாரங்களில் குப்பைகள் குவிந்தும்,  கழிவுநீர் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்தும், போதுமான மேற்கூரைகள் இல்லாமலும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மானாமதுரை ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உருவாக்கப்பட்டது. மானாமதுரை வழியாக மதுரை மார்க்கத்திலிருந்தும் திருச்சி மார்க்கத்திலிருந்தும் ராமேசுவரம்,  தனுஸ்கோடிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் காமராஜர் ஆட்சி காலத்தில் மானாமதுரை -விருதுநகர் இடையே ரயில்பாதை அமைக்கப்பட்டு மானாமதுரையிலிருந்து தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டன.
நாடு முழுவதும் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து மதுரை - திருச்சி இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடந்தபோது சென்னையிலிருந்து மானாமதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்துக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது மானாமதுரை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். அகல ரயில்பாதைப் பணிகள் முடிந்ததும் வழக்கம்போல் மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் மதுரை வழியாக இயக்கப்பட்டதும் மானாமதுரை ரயில் நிலையத்துக்கான முக்கியத்துவம் குறைந்தது. பின்னர் மதுரை - ராமேசுவரம்,  மானாமதுரை -திருச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிந்தும் இந்த மார்க்கங்களில் பயணிகள் எதிர்பார்த்த அளவுக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதையிலும் பயணிகள் எதிர்பார்த்தபடி ரயில்கள் இயக்கப்படாத நிலை உள்ளது.  தற்போது மானாமதுரை ரயில் நிலையத்தைக் கடந்து
20-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. ஆனால் மதுரை - ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வந்த இரவு நேர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுவிட்டதால் ராமேசுவரம் செல்ல வரும் வெளிமாநில பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது.
மானாமதுரை ரயில் நிலையத்துக்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் பிளாட்பாரங்களில் குப்பைகள் குவிந்து சுகாதாரமின்றி காணப்படுகிறது. மேலும் பிளாட்பாரங்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் மூடப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்புகள் பல இடங்களில் உடைந்துபோய் கிடப்பதால் கழிவுநீர் வெளியேறி பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. பிளாட்பார நடைமேடைகளில் போதுமான அளவுக்கு மேற்கூரை வசதி செய்யப்படாததால் பயணிகள் மழையில் நனைந்தும் வெயிலில் நின்றும் ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது.
மேலும் ஒரே ஒரு டிக்கெட் கவுண்டனர் மட்டும் செயல்படுவதால் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இங்குள்ள ரயில்வே காவல் நிலையக் கட்டடமும் மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் மேற்கூரை வழியாக கட்டடத்துக்குள் கசிகிறது. இதனால் பதிவேடுகள் நாசமாகும் நிலை உள்ளதாக இங்கு பணியாற்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர். மதுரை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய சந்திப்பாக உள்ள மானாமதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதுடன் மதுரை - ராமேசுவரம் இடையே இரவு நேர  ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com