"வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
     இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்றோருக்கு, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தின் மூலம் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
     இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு தோல்விக்கு மாதந்தோறும் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என காலாண்டுதோறும் கணக்கீடு செய்து, அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.    விண்ணப்பிக்க விரும்புவோர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினராயின் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது. வேலைவாய்ப்பு அடையாள அட்டை விண்ணப்பிக்கும் தேதி வரை புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும்.
     மேற்கண்ட தகுதிகளுடன் கூடிய மனுதாரர்கள் தங்களது அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்று விண்ணப்பிக்கலாம்.
    இவை தவிர, ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் நடப்பு காலாண்டுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு புத்தகத்தை நடப்பு மாதம் வரை குறிப்புகள் இட்டு உரிய படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். சுய உறுதி மொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.
     கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பித்தால், உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com