சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் சாவு

சிவகங்கை அருகே வியாழக்கிழமை கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை அருகே வியாழக்கிழமை கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், வெளிபட்டினத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தேவப்பாண்டி (57). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் மூத்த சகோதரர். இவர், வியாழக்கிழமை காலை ராமநாதபுரத்திலிருந்து திருச்சி விமானம் நிலையம் நோக்கி மானாமதுரை-பெரம்பலூர் சாலையில் காரில் சென்றுள்ளார்.
சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரில் உள்ள விவசாயப் பண்ணை பகுதியில்  சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தேவப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரை ஓட்டி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (35) என்பவர், தலையில் பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தேவப்பாண்டியின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  
இது குறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்: கோகுல இந்திராவின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கோகுல இந்திராவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தி:
தங்களது அன்புச் சகோதரர் தேவபாண்டியன் சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தால் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com