சிவகங்கை மாவட்டத்தில் 'தூய்மையே சேவை' திட்டம்: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் வாழும் பொதுமக்கள் அந்தந்த பகுதியினை தூய்மைப்படுத்தும் வகையில் தூய்மையே சேவை எனும் திட்டம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் வாழும் பொதுமக்கள் அந்தந்த பகுதியினை தூய்மைப்படுத்தும் வகையில் தூய்மையே சேவை எனும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் க.லதா தூய்மைப் பணியினை தொடக்கி வைத்துப்பேசியது: செப்.15 முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி வரை தூய்மையே சேவை எனும் கோட்பாட்டின் படி சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணியில் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களை முழுமனதோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் ஈடுபடுத்தி தங்களது வீடு மற்றும் சுற்றுப் புறத்தை மட்டுமின்றி, பள்ளி வளாகங்கள், கல்லூரி வளாகம், சுகாதார நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவைதவிர, மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின்படி திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்த சேவை குறித்த உறுதி மொழியினை எடுததுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com