பூலாங்குடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: கிராமத்தினர் கிணறு தோண்டி தண்ணீர் எடுப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், பூலாங்குடி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் ஊருணியில் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், பூலாங்குடி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் ஊருணியில் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இளையான்குடியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பூலாங்குடி கிராமம் உள்ளது. இங்கு, 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால், கிராம மக்கள் ஊருணிக்குள் கிணறு தோண்டி, அதிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இது குறித்து திமுக ஒன்றியச் செயலர் சுப. மதியசரன் கூறியதாவது. பூலாங்குடி கிராமத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இக் குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிகள் முறையாக நடக்காததால், இந்தக் கிராமத்துக்கு வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், பூலாங்குடி மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்படுகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கிராமத்தில் உள்ள தூர்ந்துபோன ஊருணிக்குள் மக்கள் கிணறு தோண்டி, அதில் ஊறி வரும் தண்ணீரை குடங்களில் சேகரித்து எடுத்துச் செல்கின்றனர். இதனால், பல மணி நேரம் காத்திருந்து பெண்கள் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பூலாங்குடி கிராம மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com