சிவகங்கை அருகே நிலக்கடலை அறுவடை மும்முரம்: விலையில்லாததால் விவசாயிகள் வேதனை

சிவகங்கை அருகே கோடைகால நிலக்கடலை பயிர் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை அருகே கோடைகால நிலக்கடலை பயிர் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், நிலக்கடலைக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை  தெரிவித்துள்ளனர்.
 குமாரபட்டி, இலுப்பகுடி, சாலூர், மீனாட்சிபுரம், உசிலம்பட்டி, இடையமேலூர் ஆகிய பகுதிகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன், மானாவாரி பயிர்களில் ஒன்றான நிலக்கடலையை கோடைகால பயிராக பயிரிட்டனர். அவை தற்போது  விளைச்சலாகி உள்ளதால் அறுவடைப்  பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விளைச்சலாகி உள்ள நிலக்கடலைக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை  தெரிவித்துள்ளனர். 
 இதுகுறித்து இலுப்பகுடியைச் சேர்ந்த விவசாயி ராமு கூறியது:
கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக கோடை கால பயிராக ஒரு ஏக்கரில் நிலக்கடலையை பயிரிட்டேன். அவை தற்போது விளைச்சலாகி உள்ளதால் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு கிலோ ரூ.120 விலையில், ஒரு ஏக்கருக்கு உரிய 30 கிலோ நிலக்கடலைப் பருப்பு வாங்கி பயிரிட்டேன்.
 நிலத்தை உழவு செய்தல், நிலக்கடலைப் பயிரிடுதல், களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், பூச்சி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆகும் செலவை கணக்கிடும்போது ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டு, பராமரிக்க ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.
 நிலக்கடலை மானாவாரி பயிர் என்பதால் ஒரு ஏக்கரில் சுமார் 18-லிருந்து 23 மூடை வரை மகசூல் கிடைக்கும். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை, பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட  காரணங்களால் மகசூல் குறைந்து, ஒரு ஏக்கரில் 12 மூடை  மட்டுமே விளைச்சலாகி உள்ளன. ஒரு மூடை நிலக்கடலை ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவாக மட்டுமே தற்போது சந்தையில் விற்பனையாகி வருகின்றன. இதனால் உரிய விலையின்றி, நிலக்கடலை பயிரிட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com