வீடுபேற்றையளிக்கும் ஒரே மொழி தமிழ்தான்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

வீடுபேற்றையளிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.

வீடுபேற்றையளிக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ் மையம் தொடக்க விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பரிசுகள் வழங்கியும், தமிழ் மையத்தைத் தொடங்கி வைத்தும் பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: 
 அருந்தமிழ் வாழவேண்டும் என்பதற்காக அரிய நெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்தவன் அதியமான். தமிழ் வழக்கு சிறக்கவேண்டும் என்று மற்றவற்றை அயல் வழக்கு என்றவர் ஞானசம்பந்தர். மகாகவி பாரதியோ தன் மனைவி செல்லம்மாவை தமிழ் படி, உன்சோர்வெல்லாம் நீங்கிவிடும், தமிழ் என்பது வெற்றிவாசகம் என்றே தமிழ்பற்றி தெரிவிக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் சொற்றமிழே ஆண்டவன் சுந்தரருக்கு அர்ச்சனைப் பாட்டு என்று போற்றுகிறார்.
 ஒரு மொழி பேசப் பயன்படலாம், ஞானத்தை வழங்கப் பயன்படலாம். ஆனால், வீடுபேற்றையளிக்கும் ஒரே மொழி தமிழ் மொழிதான். இதனை மாணிக்கவாசகப் பெருமான் உணர்ந்தே திருவாசகத்தில் தெரிவிக்கிறார். எனவே, தமிழர்களுக்கு ஆயிரம் மொழிகளின் துணைவேண்டுவதாக இருக்கலாம். ஆனால், தமிழர்களின் தலைவாசல் தமிழே என்றார்.
 விழாவில், தேவகோட்டை தமிழ் மையத்தின் தலைவர் 
சபா. அருணாசலம் தலைமை வகித்தார். 
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய நிதி வழங்கிய ரவி வெங்கடாசலம், ஏ. ராமநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரியைகள் மகாலெட்சுமி, செலின் போர்சியா, சௌந்தரவல்லி ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கிப் பேசினர். பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற கோதை ஆண்டாள், கண்ணகி நாடகங்கள் நடைபெற்றன.
 விழாவில், பேராசிரியர் ஆறுமுகம், கரு. முத்தையா, கவிஞர் அப்பச்சி சபாபதி, அருள்சாமி பழனி, பேராசிரியர் பழனி ராகுலதாசன், முன்னாள் கடற்படை அதிகாரி முத்துக்கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 முன்னதாக தேவகோட்டை தமிழ் மைய துணைத்தலைவர் சே. குமரப்பன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com