சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா
By DIN | Published on : 17th April 2018 06:53 AM | அ+அ அ- |
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 20 -ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் கோயில் அருகே பந்தல் போட்டு அமைக்கப்படும் மண்டகப்படிகளில் அம்மனும் சுவாமியும் இரவு சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அதன்பின் வீதி உலா வருவர். திருவிழாவுக்காக கோயிலில் பந்தல் அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆனந்தவல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி நுழைவு வாயில் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது. பின்னர் முகூர்த்தக்காலுக்கு பூஜைகள் நடந்தது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.