அழுத்தம் தாங்காமல் அடிக்கடி மின்தடை: மானாமதுரையில் கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

மானாமதுரையில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு இங்கு கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு இங்கு கூடுதலாக துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  மானாமதுரை நகரில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிற்கு மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தின் வழியாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
 இந்த மின் நிலையத்தில் பழைய கருவிகளே உள்ளதால் அதிகரித்துள்ள மின்தேவைக்கு தகுந்தவாறு அவற்றால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மானாமதுரை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
 மேலும், நகர் பகுதி எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து, புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்கி மின்சாரம் விநியோகம் செய்யும் நிலையில் துணை மின் நிலைய மின் சாதனங்களை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
 தற்போது கோடை காலம் என்பதால் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. சிப்காட் துணை மின் நிலையத்தில்  மின்சாதனங்கள் நவீனமயமாக இல்லாததால் மின் அழுத்தம் தாங்காமல் பல சாதனங்கள் செயலிழந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. 
 இதுகுறித்து மின்வாரிய ஊழியர் ஒருவர் கூறியதாவது:
 சிப்காட் துணை மின் நிலையத்தில் அனைத்து சாதனங்களும் மிகவும் பழைமையானதாக உள்ள. பழுதாகும் சாதனங்களை உடனுக்குடன் மாற்றிவிட்டு புதிதாக சாதனங்கள் அமைக்கப்படாத நிலை நீண்டகாலமாக உள்ளது. ஏற்கெனவே நகர் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்ய முடியாமல் துணை மின் நிலையம் திணறி வருகிறது. இந்நிலையில் ஊரக பகுதி மின் விநியோகமும் சிப்காட் துணை மின் நிலையத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது மின் அழுத்தம் தாங்காமல் துணை மின் நிலையத்திலுள்ள சாதனங்கள் தினமும் பல முறை பழுதாகி வருகின்றன. இவற்றை அவ்வப்போது சரி செய்து மின் விநியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், அதிகரித்து வரும் மின் தேவைகளுக்கு ஏற்ப நகர் பகுதியில் பல இடங்களில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்படாமல் உள்ளன. 
 எனவே, மானாமதுரை பகுதியில் கூடுதலாக துணை மின் நிலையம் அமைத்து, மின் விநியோகத்தை பிரித்து வழங்கினால் தான் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
 இதே கோரிக்கையை இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com