12 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நாட்டரசன்கோட்டை- ஒய்யவந்தான் சாலை

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் இருந்து ஒய்யவந்தான் வரையிலான சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு போக்குவரத்து பெரிதும்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் இருந்து ஒய்யவந்தான் வரையிலான சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை- தொண்டி சாலையில் நாட்டரசன் கோட்டையில் இருந்து பிரிந்து செல்கிறது ஒய்யவந்தான் சாலை. சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் உள்ள இச்சாலை சாத்தனி, பேச்சாத்தகுடி, அதப்படக்கி, வெட்டிகுளம், உடகுளம், சுருக்கத்தி, கருமாந்தங்குடி ஆகிய கிராமங்களை இணைக்கிறது. அரசு நகரப் பேருந்து, மதுரையில் இருந்து புறநகர் பேருந்து மற்றும் சிற்றுந்து ஆகியவை இக்கிராமங்கள் வழியாகச் சென்று வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் சாலை அமைக்கப்பட்ட பின்பு தற்போது வரையில் அதை சீரமைக்கவோ அல்லது புதிய தார்ச்சாலை அமைக்கவோ அரசு முயற்சிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதனால் நாட்டரசன் கோட்டையில் இருந்து ஒய்யவந்தான் வரையில்  சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சாலை மோசமாக உள்ளதால் இதில் செல்லும்  வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டுகின்றனர்.  
மேலும் அரசுப் பேருந்துகள் கிராமங்களுக்கு உரிய நேரத்தில் செல்வதில்லை. பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள்,அரசு அலுவலர்கள்,தொழிலாளர்கள்,விவசாயிகள் குறித்த நேரத்திற்குள் உரிய இடங்ளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கும் கிராமத்தினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள ஒய்யவந்தான் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியது: ஒய்யவந்தான் சாலை  தொடர்பாக எந்தவித புகாரும் எங்களுக்கு வரவில்லை. இருப்பினும், பழுதடைந்த சாலை குறித்து ஆய்வு செய்து, நிதிநிலை அடிப்படையில் விரைவில் சீரமைக்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com