கற்கள் பெயர்ந்து முற்றிலும் சேதம்: திருப்பத்தூரில் கால்களை பதம் பார்க்கும் காளியம்மன் கோயில் சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிய தெருவில் இருந்து காளியம்மன் கோயில் வரை செல்லும் பிரதான சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிய தெருவில் இருந்து காளியம்மன் கோயில் வரை செல்லும் பிரதான சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
   திருப்பத்தூர் பேரூராட்சி 16-ஆவது வார்டில் கடந்த 2011-2012 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கிழ் ரூ.16.20 லட்சம் மதிப்பில் மதுரை சாலை முதல் ராஜகாளியம்மன் கோயில் வரை சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. பெரும்பாலான இடங்களில் தார்ச் சாலை முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறிவிட்டது. 
  மாங்குடி, மணக்குடி, காரையூர், வைரவன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் சிங்கம்புணரி பிரதான சாலையில் இருந்து இச்சாலையினை குறுக்கு சாலையாக பயன்படுத்துகின்றனர். மேலும் திருப்பத்தூர் தாலூகா அலுவலகம், மருத்துவமனைக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளதால் இச்சாலையில் இருசக்கர வாகனம், கார்கள், பள்ளி வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 
மேலும் பேருந்து நிலையத்திலிருந்து காளியம்மன் கோயில் தெரு, உசேன் அம்பலம்நகர் கண்மனிபாக்கம், அம்மன்வீதி போன்ற பகுதிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் வருவதற்குத் தயங்குகின்றனர். ஒருவேளை வரும் பட்சத்தில் இருமடங்கு தொகை வசூல் செய்கின்றனர். எனவே சாலையினை சரி செய்ய பேரூராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 '' செட்டிய தெருவில் இருந்து பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் மற்றும் திருமுருகன் திருக்கோயில் திருவிழாக்களுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். 
மேலும் பால்குடம், பூத்தட்டு, காவடி எடுத்துவரும் போது, சாலையின் நடுவே தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எங்கள் பகுதிகளில் மணப்பெண் பார்ப்பதற்குக் கூட மாப்பிள்ளை வீட்டார் வர தயங்குகின்றனர். காளியம்மன் கோயில் திருவிழாவிற்குள் இந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர்செய்ய வேண்டும்'' என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com