காரைக்குடி கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல் விழா
By DIN | Published on : 13th January 2018 08:32 AM | அ+அ அ- |
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் தை பொங்கலை முன் னிட்டு சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவிலூர் மடாலயக்கல்வி நிறுவனங்களின் சார்பில் வெள்ளிக்கிழமை பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் பொங்கலை பானையை அடுப்பில் வைத்து துவக்கிவைத்தார். அதைத்தொடர்ந்து கூட்டாக படையல் செய்து தீபாராதனைகள் நடைபெற்று அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள்,ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ராஜராஜன் பொறியியல்: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா அதன் முதல்வர் குமாரவடிவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் துணை முதல்வர் ஹயாசிந்த் சுகந்தி, நிர்வாக அலுவலர் எஸ். ஜெயபிரகாசன், டீன் பிஎல். சுப்பிரமணியன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நேஷனல் கேட்டரிங்: காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கல்லூரியின் தாளாளர் சையது, முதல்வர் சிவராமமூர்த்தி, ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அழகப்பா பல்கலை.: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார். தேவகோட்டை சொற்பொழிவாளர் ச. மகாராஜன் மகிழ்ச்சி பொங்கட்டும் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு, தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் சே. செந்தமிழ்ப்பாவை, என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் சு. ராசாராம் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நகராட்சி பள்ளி: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி பேர்ல் சங்கமம் மற்றும் பள்ளி யின் இன்ட்ராக்ட் சங்கம் ஆகியோர் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அ. மாரிமுத்து தலைமை வகித்தார்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் துணை முதல்வர் கேப்டன் டி.ஏ. விஜயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா, ரோட்டரி பேர்ல் சங்கமம் தலைவர் நாச்சிப்பன், செயலாளர் நாவுக்கரசு, புலவர் நாகப்பன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலை வர் அழகுசுந்தரி மற்றும் மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.