நவ. 23-இல் தமிழ்நாடு பெயர் மாற்ற பொன்விழாவைக் கொண்டாடக் கோரிக்கை

தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு வரும் நவ. 23-ஆம் தேதி யுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து, அன்று பொன் விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என தமிழக மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு வரும் நவ. 23-ஆம் தேதி யுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதையடுத்து, அன்று பொன் விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என தமிழக மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காரைக்குடியில் வெள்ளிக்கிழமை இம்மன்றத்தின் தலைவர் ச.மீ.ராசகுமார், செயலர் கரு.ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது: மாகாணங்களை மொழிவாரியாக மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி 1956 ஆம் ஆண்டு சங்கரலிங்கனார் 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். அதன்பிறகு இக்கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
பலமுறை சென்னை சட்டப் பேரவையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்ற முயற்சி செய்தும் முடியாமல் போனது.
பின்னர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் சட்டப் பேரவையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து 23.11.1968 அன்று மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அரசு விழாவாக அன்று கொண்டாடப்பட்டது.
தற்போது வரும் 23.11.2018 அன்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. இதனை பொன்விழாவாகக் கொண்டாட வேண்டும்.
சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்துசென்ற கேரள மாநிலம் நவ. 1-ஆம் தேதியை கேரள பிறவி' என்றும், கர்நாடகம் ராஜ்யுத்சவம்' என்றும் ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழர் தாயக நாள் என்று எதையும் நாம் கொண்டாடாமல் இருக்கிறோம்.
எனவே 12 ஆண்டுகள் போராடிப் பெற்ற தமிழ்நாடு பெயர் மாற்றம் பெற்ற நாளினை தமிழக அரசு பொன்விழாவாக அறிவித்து அதனை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான அனைத்துக்கட்சி தமிழறிஞர்கள் குழு ஒன்றை அமைத்து இதர மாநிலங்களைப் போல் தமிழ்நாடு மாநிலத்திற்கான மாநிலக் கொடியினை உருவாக்கி வெளியிடவேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com