பண விலக்கம்: கம்பம் பள்ளத்தாக்கில் "புளிக்கும்' திராட்சை! 3 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பாதிப்பு

பண விலக்கம் பிரச்னையால், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் திராட்சை அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பண விலக்கம்: கம்பம் பள்ளத்தாக்கில் "புளிக்கும்' திராட்சை! 3 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பாதிப்பு

பண விலக்கம் பிரச்னையால், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் திராட்சை அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 இப்பகுதியில் மொத்தம் 1,764 ஹெக்டேர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை, தாம்ஸன் விதையில்லா மற்றும் வீரிய ஒட்டுரக திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. நாட்டில் வேறு மாநிலங்களில் இல்லாத வகையில் இங்கு ஆண்டுக்கு 3 முறை திராட்சை அறுவடை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  ஒரு ஏக்கருக்கு சராசரியாக 10 முதல் 12 டன் திராட்சை மகசூல் கிடைக்கும். இங்கிருந்து மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளாவுக்கு அவை அனுப்பப்படுகின்றன. இங்கு அறுவடையாகும் திராட்சைகளுக்கு அவ்வப்போது விவசாயிகளுக்கு வியாபாரிகள் நேரடியாக பணம் பட்டுவாடா செய்து விடுவர்.
 இந்நிலையில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க ப்பட்டதை அடுத்து திராட்சை விவசாயப் பணிகளில் மந்தம் ஏற்பட்டது. உரம், பூச்சி மருந்துகள் வாங்க முடியாமலும், தொழிலாளர்களுக்கு அன்றாடம் சம்பளம் கொடுக்க முடியாமலும், வங்கிக் கணக்கில் இருந்து போதிய பணம் எடுக்க முடியாமலும் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல் திராட்சை வியாபாரிகள் மத்தியில் போதிய பணப் புழக்கம் இல்லாததால், அறுவடை செய்யப்படும் திராட்சைப் பழங்களுக்கு உரிய தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய முடியவில்லை. கடந்த 20 நாள்களாகவே சிறிய தொகையை கொடுத்து விட்டு கடன் கணக்கில்தான் வியாபாரிகள் திராட்சையை கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
  அதேபோல், விவசாயிகள் தங்களது சொந்தப் பொறுப்பில் பழங்களை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு சென்றாலும் கமிஷன் கடைகளில் உடனடியாக பணப் பட்டுவாடா செய்வதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ரூபாய் நோட்டு பிரச்னையால் பல்வேறு இடங்களில் திராட்சை பழங்களை அறுவடை செய்யாமல் விவசாயிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு வீணாகி வருகிறது.
 இதுகுறித்து சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கச் செயலர் கே.முகுந்தன் கூறியது: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து தற்போது வரை பணப் புழக்கம் சீரடையாததால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 3ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை அறுவடைப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு முன்பு அறுவடை பணிகள் முடியாவிட்டால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com