கொடைக்கானல்-கும்பக்கரை மலையேற்ற சுற்றுலா தொடங்க பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்-கும்பக்கரை வனப் பகுதியில் மலையேற்ற சுற்றுலாவைத் தொடங்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்-கும்பக்கரை வனப் பகுதியில் மலையேற்ற சுற்றுலாவைத் தொடங்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து கும்பக்கரை, வெள்ளகவி வழியாக சுமார் 20 கி.மீ. தொலைவு நடந்து சென்று கொடைக்கானல் அருகே உள்ள பாம்பார்புரத்தை அடையலாம். இந்த மலைச் சாலையை (மெட்டல் சாலை) பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை பகுதி மலைக் கிராம மக்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அப்பகுதியில் விளையும் பொருள்கள் குதிரை மற்றும் நடைச்சுமையாக எடுத்து வரப்பட்டு, பெரியகுளம் மற்றும் வடுகபட்டி பகுதியில் உள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக கொடைக்கானல்-பெரியகுளத்துக்கு வணிகப் போக்குவரத்து இந்த சாலையின் வழியாக இருந்தது. அதையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் வத்தலகுண்டு-ஊத்து வழியாக கொடைக்கானலுக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து துவங்கியது. அதன் பின்னர், பெரியகுளம்-கும்பக்கரை-வெள்ளகவி சாலை பயன்பாடில்லாமல் போனது. வெள்ளகவி பகுதி கிராம மக்கள் மட்டும் தங்கள் விளைபொருள்களை குதிரைகளில் இச்சாலைகளின் வழியாக எடுத்துச் செல்கின்றனர்.
இந்த சாலையின் வழியாக கொடைகானலில் இருந்து கும்பக்கரை வரை உள்ள 10 கி.மீ. தொலைவை 8 மணி நேரத்தில் அடையலாம். இவ்வழியில் அடர்ந்த வனப்பகுதி, பசுமையான புல்வெளிகள், அருவிகள் மற்றும் அரியவகை மூலிகைகள், வனவிலங்குகள் உள்ளதால், இப்பகுதி வழியாகச் செல்ல ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர். ஆனால், சென்று வர போதிய வழிகாட்டிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் தயங்குகின்றனர். எனவே, சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில், மலைக் கிராம மக்கள் கொண்ட குழு அமைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக அவர்களை நியமிக்க வேண்டும். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு வசதிகள் ஏற்படுத்தி தந்து, மலைக் கிராம மக்கள் மற்றும் வனத் துறையினருக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது குறித்து தேவதானப்பட்டி வனச் சரகர் கருப்பையா கூறியது: மலைக் கிராம மக்களை வைத்து மலையேற்ற (டிரக்கிங்) வசதி செய்யப்பட்டுள்ளது. கும்பக்கரை வழியாக கொடைக்கானலுக்கு நடந்து செல்ல விரும்புவர்கள், தேவதானப்பட்டி வனத் துறையை அணுகலாம். அவர்களிடம் ரூ. 250 வசூலிக்கப்படுகிறது. மேலும், உணவு மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com