கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாத கழிப்பறை: கிராம மக்கள் அவதி

போடி அருகே பொட்டல் களம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போடி அருகே பொட்டல் களம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடி அருகே, போடி-மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டல்களம் கிராமம்.  இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 
பொட்டல்களம் கிராம மக்களின் வசதிக்காக கிராமத்திற்குள்ளேயே சுகாதார வளாக கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த கழிப்பிடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி மோட்டார் பழுது, கழிப்பறை தொட்டி சேதம் உள்ளிட்ட பிரச்னை ஏற்பட்டு வந்தது.
 இதனையடுத்து இக்கிராம மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் கிராமத்திற்கு வெளியே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சுகாதார வளாக கழிப்பிடம் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. மின் சாதனங்கள் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், மின்சார இணைப்பு மட்டும் வழங்க வேண்டும்.
இதனால் இந்த கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வராத நிலையில் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் கழிப்பிட வசதியின்றி திறந்த வெளிகளையும், சாலையோரங்களையும் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் திறந்த வெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாக கழிப்பிடத்திற்கு மின் இணைப்பு பெற்று உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என இக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com