தேனி மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ் புலிகள் அமைப்பினர் முற்றுகை: 58 பேர் கைது

பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் போது கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஊராட்சிப் பணியாளர்கள் மீது நடவடிக்கை

பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் போது கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஊராட்சிப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை தமிழ் புலிகள் அமைப்பினர் தேனி மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காமாட்சி (65). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். ஜி.கல்லுப்பட்டி,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே கடந்த 1968-ஆம் ஆண்டு காமாட்சியின் தந்தை துப்புரவு தொழிலாளியான பெருமாள் பெயரில் வருவாய் துறை சார்பில் அனுபவ பாத்திய பட்டா வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் காமாட்சி குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்,  பெருமாள் இறந்து விட்டதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனுபவ பாத்திய பட்டா காலாவதியாகி விட்டதாகவும், காமாட்சி குடிசை அமைத்துள்ள  இடம் கழிவுநீர் சாக்கடை அமைப்பதற்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் காமாட்சியின் குடிசை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, தனது குடிசை அகற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில், காமாட்சியின் இறப்புக்கு காரணமாக இருந்ததாக ஜி.உசிலம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜன் மற்றும் பணியாளர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்புலிகள் அமைப்பின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் தலித்ராயன், மண்டல செயலர் அருந்தமிழரசு, துணைச் செயலர் ஆதிநாகராஜ், காமாட்சியன் மனைவி காளியம்மாள் மற்றும் குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  சமரசம் ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தலித்ராயன் உள்ளிட்ட 58 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com