மந்தைக்குளம் நீர்வரத்து வாய்க்கால் வழித்தடம் மாற்றம்: விவசாயிகள் புகார்

தேனியில் அல்லிநகரம் மந்தைக்குளத்திற்கான நீர்வரத்து வாய்க்கால்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதால் குளத்தில் தண்ணீர் தேக்குவதில்

தேனியில் அல்லிநகரம் மந்தைக்குளத்திற்கான நீர்வரத்து வாய்க்கால்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதால் குளத்தில் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் விவசாயிகள் செவ்வாய்கிழமை மனு அளித்தனர்.
தேனி அல்லிநகரம் மந்தைக்குளத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை காட்டாற்று ஓடைகள் மற்றும் வீரப்பஅய்யனார் மலைகரடு வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வரத்து உள்ளது. மந்தைகுளத்தில் முழு கொள்ளவிற்கு தண்ணீர் நிரம்பிய பின்பு, உபரிநீர் மீறுசமுத்திரம் கண்மாயில் தேக்கப்படும். மந்தைக்குளம், மீறு சமுத்திரம் கண்மாய் ஆகியவற்றில் தண்ணீர் தேக்குவதால் அல்லிநகரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், அப்பகுதியில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
ஆனால், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தும், மந்தைக்குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை. இந்த நிலையில், வீரப்பஅய்யனார் மலை கரட்டில் மந்தைக்குளத்திற்கான நீர்வரத்து வாய்க்கால்களை மறித்தும், பொதுப் பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை உடைத்தும், தனியார் பண்ணை நிலங்களுக்கு வாய்காலின் வழித்தடம் மாற்றப்படுள்ளதாகவும், இதனால் கண்மாய்களில் தண்ணீர் தேக்க முடியாமல் விவசாயம் மற்றும் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லிநகரம் கிராமக் கமிட்டி தலைவர் நா.கோவிந்தசாமி தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com