கம்பம் அருகே 18 ஆம் கால்வாயில் உடைப்பு: சாலையில் வீணாகும் தண்ணீர்

கம்பம், க.புதுப்பட்டி அருகே பென்னிகுயிக் பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்கம் வழியாக செல்லும்,18 ஆம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது.

கம்பம், க.புதுப்பட்டி அருகே பென்னிகுயிக் பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்கம் வழியாக செல்லும்,18 ஆம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது.
   தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள 18 ஆம் கால்வாய் பாசன நிலங்களுக்கு கடந்த திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 279 கன அடி தண்ணீர் கால்வாயில் செல்கிறது. சுமார் 40 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாயில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. குறிப்பாக கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் மேற்கு பகுதி விளைநிலங்களுக்குச் செல்லும் சாலையில் பென்னிகுயிக் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் செல்லும் 18 ஆம் கால்வாய் தண்ணீர் சைபன் எனப்படும் முறையில் சுமார் 5 அடி உயரத்திலிருந்து கீழே சுரங்கத்தில் விழுந்து, பின்னர் திரும்ப 5 அடி உயரத்தில் இயற்கையான முறையில் பம்பிங் செய்ப்பட்டு மறுபுறம் உள்ள கால்வாயில் செல்கிறது. தண்ணீர் செல்லும் இரண்டு பாலங்களுக்கிடையே வாகனங்கள் செல்லும் சாலை உள்ளது. திங்கள்கிழமை திறந்து விடப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை காலை க.புதுப்பட்டி பென்னிகுயிக் பாலத்தை கடந்து தண்ணீர் சென்றது.
 இந்நிலையில்  புதன்கிழமை பாலத்தின் கீழ் கசிய ஆரம்பித்தது. வியாழக்கிழமை கால்வாய் தண்ணீர் பெருக்கெடுத்து க.புதுப்பட்டியை நோக்கி கிழக்கு சாலை வழியாக வீணாக செல்கிறது. இது பற்றி விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் செல்லும் கால்வாயை முறையாக பராமரிக்காததே இதற்குக் காரணம் என்றனர். இது குறித்து 18 ஆம் கால்வாய் பிரிவு பொறியாளரிடம் கேட்டபோது, கால்வாயில் உடைப்பு ஏற்படவில்லை, தண்ணீர் கசிவுதான் ஏற்பட்டுள்ளது. 
      மேலும் தண்ணீர் வராத காலங்களில் க.புதுப்பட்டியை கடக்கும் கால்வாய்க்குள் தென்னை மட்டைகளை போட்டு வைத்து கால்வாயை அடைத்துள்ளனர். அதன் எதிரொலியாகத்தான் கால்வாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. மணல் மூட்டைகளைக் கொண்டு கசிவை அடைத்துள்ளோம். தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com