சாலை நடுவே கட்டுமானப்பொருள்கள் குவிப்பு: கம்பம் - கம்பமெட்டு மலைச்சாலையில் விபத்து அபாயம்

கம்பம்-கம்பமெட்டு மலைச்சாலையில் நடைபெறும் சாலை பணிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் விபத்துகள் உருவாகவும், சாலைகள் சேதமாகவும் காரணமாகி வருகின்றனர். 

கம்பம்-கம்பமெட்டு மலைச்சாலையில் நடைபெறும் சாலை பணிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் விபத்துகள் உருவாகவும், சாலைகள் சேதமாகவும் காரணமாகி வருகின்றனர். 
   தேனி மாவட்டம் கம்பம் - கம்பமெட்டு மலைச்சாலையில் தற்போது தனியார் தொலை தொடர்பு நிறுவனம் கண்ணாடி மின்னிழை இணைப்பு (ஆப்டிகல் பைபர் கேபிள்) வழங்குவதற்காக மலைச்சாலை ஒரத்தில் சுமார் 7  கிலோ மீட்டர் (இங்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)  நீளத்திற்கு பள்ளம் தோண்டி பதித்து வருகின்றனர். மின்னிழை கேபிள் பதிப்பதற்கு தேவையான, கட்டுமான பொருள்களான மணல், ஜல்லிக் கற்களை குவித்தும், பைபர் குழாய் போன்ற தளவாட பொருள்களை, சாலையின் மையபகுதியில் அப்படியே போட்டுவைத்தும் வேலைகளை செய்து வருகின்றனர்.  
  மலைச்சாலையில் ஏறும், இறங்கும் வாகனங்கள் சாலையின் மையபகுதியில் கட்டுமான பொருள்கள் குவிக்கப்பட்டிருப்பது தெரியாமல் வருகின்றன. அருகில் வந்ததும் வாகனத்தில் திடீர் தடை ஏற்படுத்தி அதன் பின்னர் சுதாரித்துச் செல்கின்றனர். மேலும் காலை, மாலை இரண்டு நேரங்களிலும் இந்த மலைச்சாலையில் சுமார் 500 க்கும் மேலான வாகனங்கள் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு செல்ல இயக்கப்படுகின்றன. இரு மாநில அரசு பேருந்துகள், சபரிமலை செல்லும் வாகனங்கள் செல்கின்ற நிலையில், விபத்துகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் பணியாளர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏலக்காய் தோட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 
 மலைச்சாலையை அன்றாடம் பயன்படுத்தும் ஏல விவசாயி ரவி கூறுகையில், மலைச்சாலை பணிகளில் கட்டுமான பொருள்களை தாறுமாறாகப் போடுவது  தமிழகத்தில் தான்  நடக்கிறது. அருகே உள்ள கேரள மாநிலம் கம்பம்மெட்டு பகுதியில் சாலைப் பணிக்கு உரிய கட்டுமானப் பொருள்கள் சாலையின் ஓரத்திலேயே வைக்கப்பட்டுள்ளன என்றார்.  இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை பணியாளர் ஒருவர் கூறும் போது, கம்பம்மெட்டு மலைச்சாலையின் ஓரங்களில் மழை தண்ணீர் செல்வதற்கான பாதைகளை அமைத்திருந்தோம். தற்போது தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் பணியால் மலைச்சாலையில் உள்ள மழைநீர் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இனி மழைக் காலங்களில் பெய்யும் மழைநீர், வனப்பகுதிகளுக்கு செல்லாமல் மலைச்சாலையிலேயே வழிந்தோடும். சேதங்களையும் அதிகம் ஏற்படுத்தும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com