பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு: தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடி கேள்விக்குறி

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் போதிய மழையின்றி அணை நீர்மட்டம் சரிந்து வருவதால், தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவது

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் போதிய மழையின்றி அணை நீர்மட்டம் சரிந்து வருவதால், தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 11,807 ஏக்கர், போடி பகுதியில் 488 ஏக்கர், தேனி பகுதியில் 2,142 ஏக்கர் உள்பட மொத்தம் 14,707 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுப் பாசனத்தில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வழக்கமாக ஜூன் 2-ஆம் தேதி பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், இந்த அணையில் இருந்து காலதாமதமாக ஜூலை 14-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் 4,000 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது.
மேலும், அணையில் போதிய நீர்இருப்பு இல்லாததால் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. இந்நிலையில், 2017, ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், நீர்பிடிப்பில் பருவமழை மிதமான அளவில் பெய்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் கடந்த சில நாள்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை குறைந்து, ஜூன் 29-ஆம் தேதி 112.10 அடியாக இருந்த அணை நீர்மட்டம், படிப்படியாக சரிந்து சனிக்கிழமை (ஜூலை 15) 111.50 அடியாக இருந்தது.
பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடிக்கும் மேல் இருந்தால் மட்டுமே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். ஆனால், நீர் வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால், இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவில் முதல்போக நெல் சாகுபடி நடைபெறுவது கேள்விக் குறியாக உள்ளது. மேலும், மூல வைகை அணை நீர்பிடிப்பில் மழையின்றி வைகை அணைக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் முதல்போக நெல் சாகுபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், தற்போது கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் இறவை பாசனத்தில் முதல் போக நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பருவமழை பொய்த்து வருவதால், இனி மாவட்டத்தில் இறவை பாசன வசதி உள்ள வயல்களில் மட்டும் நெல் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அணை நீர்மட்டம்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் சனிக்கிழமை 11.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து 39 கன அடி. அணையில் நீர் இருப்பு 1,151 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 225 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர்பிடிப்பில் 1.2 மி.மீ.. தேக்கடியில் 1.6 மி.மீ., மழை பெய்துள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 29.27 அடி. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 144 கன அடி. அணையில் நீர் இருப்பு 340 மில்லியன் கன அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com