கம்பத்தில் புதிய காவலர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கியதில் விதிமீறல்: எஸ்.பி விசாரிக்க முடிவு

கம்பத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட நவீன அடுக்குமாடி குடியிருப்பில் காவலர்களுக்கு வீடு ஒதுக்கியதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  

கம்பத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட நவீன அடுக்குமாடி குடியிருப்பில் காவலர்களுக்கு வீடு ஒதுக்கியதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.  
   கம்பத்தில் நவீன காவலர் குடியிருப்புத் திட்டம் 2013-14 இன் கீழ், வருவாய் அலுவலக சாலையில் ரூ. 6 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் 49 வீடுகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு முடிவடைந்துள்ளன. ஏற்கெனவே உள்ள பழைய குடியிருப்புகள் வளாகத்தின் மற்றொரு பகுதியில் இந்த புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
   காவலர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கும்போது, முதலில் அந்த குடியிருப்பு எந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறதோ, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதன்படி, கம்பத்தில் புதிய குடியிருப்பில் தெற்குக் காவல் நிலைய காவலர்களுக்கே முன்னுரிமை, அதையடுத்து வடக்குக் காவல் நிலையம், போக்குவரத்து காவலர்கள், சப்-டிவிஷன் என்ற வரிசையில் ஒதுக்கீடு செய்யவேண்டும். மேலும், காவல் ஆய்வாளர்கள், சார்பு-ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு-ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என்று அவர்களது பணிமூப்பு அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
   குறிப்பாக, பணிமூப்பு, முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு தரைத்தளத்திலும், பின்னர் படிப்படியாக பிற தளங்களிலும் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று விதியுள்ளது.
  இந்நிலையில், கம்பம் காவலர் குடியிருப்பில் புதிய வீடுகள் ஒதுக்கியதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக காவலர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. பணம் பெற்றுக்கொண்டு புதிதாக பணிக்கு வந்தவர்களுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மேல்தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணியில் சேர்ந்த சில ஆண்டுகளேயான இளைஞர்களுக்கு தரைத்தளம், முதல் தளம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வீடு ஒதுக்கப்பட்டதில் வீதிமீறலுடன் பாரபட்சம் இருப்பதாகவும், அது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விசாரித்து தேர்வை ரத்து செய்து, புதிதாக விதிமுறைப்படி பயனாளிகளைத் தேர்வு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் கூறுகையில், விதிமுறைப்படி முதியவர்கள், வயது, பணி அனுபவ அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததாக, காவல் துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இது குறித்து விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com