மங்கலதேவி கண்ணகி கோயில் மலைப் பாதை: எஸ்.பி. ஆய்வு

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பளியன்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
தமிழக- கேரள எல்லையில் கூடலூர் வனப்பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. கோயிலுக்கு லோயர் கேம்ப்-பளியன்குடி வழியாக 5.6 கி.மீ. தொலைவு நடந்து செல்லக்கூடிய நடைபாதை உள்ளது. மேலும், கேரளம் வழியாக 14 கி.மீ. தொலைவு ஜீப்பில் செல்லக்கூடிய வனச் சாலையும் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பௌர்ணமி திருவிழாவில் பங்கேற்பதற்கு மட்டுமே பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் கேரள வனத் துறை அனுமதி அளித்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டு மே 10-ஆம் தேதி மங்கலதேவி கண்ணகி கோயில் விழா நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, தமிழக-கேரள அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கோயிலுக்குச் சென்று வரும் தமிழக பக்தர்களுக்கு கேரள வனத் துறை ஏராளமான கெடுபிடிகளை விதித்து வருகிறது.
அதைத் தவிர்க்கவும், ஏராளமானோர் கோயிலுக்குச் சென்று வர நடைபாதையை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் பளியன்குடி அத்தியூத்து வனப் பாதையை, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்ததாக, போலீஸார் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது, கூடலூர் வனச் சரகர் அன்பழகன் தலைமையிலான வனத் துறையினரும் உடன் சென்றிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com