தேனியில் புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

தேனியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வைகை அணை புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம்

தேனியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வைகை அணை புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 தேனி அல்லிநகரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பழனிசெட்டிபட்டி குடிநீரேற்று நிலையம், குன்னூர்- அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறைகிணறுகள், வீரப்பஅய்யனார் கோயில் குடிநீர் திட்ட உறைகிணறு ஆகியவற்றில் இருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
 இதுபோதுமானதாக இல்லாததால், வறட்சிக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், குடியிருப்பு பகுதிகளின் விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம் ஆகிவற்றுக்கு ஏற்ப தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு தினமும் 24.62 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யும் வகையில், வைகை அணை நீரேற்று அணை அருகே ரூ.68.82 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் திட்டப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து, புதிய குடிநீர் திட்ட பிரதானக் குழாய்கள் வழியாக தேனியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் வரை சோதனை நீரோட்டம் நடைபெற்றது.
பொதுப் பணித்துறை தடை: இந்நிலையில், வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்ததால் மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்காக தேனி நகராட்சி புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதனால், பணிகள் முழுமையடைந்து 3 மாதங்களாகியும் தேனி புதிய குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.  
 தற்போது வறட்சியால் ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்தின்றி தேனி நகராட்சி குடிநீர் திட்டங்களின் செயல்திறன் குறைந்துள்ளது.
நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டும் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
 தற்போது முல்லைப் பெரியாற்றில் இருந்து விநாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
வைகை அணையில் போதிய தண்ணீர் இருப்பில் உள்ளதால், தேனியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, வைகை அணை புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com