நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி

தேனியில் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட கம்பம், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தேனியில் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட கம்பம், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேனியில் போக்குவரத்து அதிகமுள்ள கம்பம், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலைகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கடந்து செல்வதற்கு சாலையோரத்தில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிக்கால்கள் மீது சாலையோர கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சிமெண்ட் சிலாப் அமைத்து மூடி வைத்துள்ளனர். மேலும் சாலையோரத்தில் மண் மேடு அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனர்.
வடிகால்கள் மூடி வைக்கப்பட்டுள்ளதாலும், மண் மேடு ஆக்கிரமிப்பாலும் மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.  பெரியகுளம் சாலையில் அல்லிநகரம்,  வாரச்சந்தை வளாகம், நேருசிலை மும்முனை சாலை சந்திப்பு, மதுரை சாலையில் பழைய பேருந்து நிலையம் நுழைவு வாயில், பகவதியம்மன் கோயில் திடல், கம்பம் சாலையில் பள்ளிவாசல் தெரு, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் குளம் போல தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்துக்குள்ளாகுகின்றனர். மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தார் சாலையில் மழைநீர் தேங்குவதால், சாலை அரிக்கப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
 நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றியும், வடிகால்களை தூர்வாரியும் மழைநீர் சாலையில் தேங்குவதை தடுக்க நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com