17 ஆண்டுகளாக இருளில் மூழ்கியுள்ள முல்லைப்பெரியாறு அணை: காற்றில் பறந்த கண்காணிப்புக்குழுவின் தீர்மானங்கள்

கடந்த 17 ஆண்டுகளாக, முல்லைப்பெரியாறு அணையில் மின்சார வசதி இல்லை, 3 ஆண்டுகளாக தமிழ்அன்னை படகு இயக்கப்படவில்லை. தமிழக அரசின் அணை பராமரிப்பு விவகாரத்தில்,

கடந்த 17 ஆண்டுகளாக, முல்லைப்பெரியாறு அணையில் மின்சார வசதி இல்லை, 3 ஆண்டுகளாக தமிழ்அன்னை படகு இயக்கப்படவில்லை. தமிழக அரசின் அணை பராமரிப்பு விவகாரத்தில்,  உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்புக் குழுவினரின் தீர்மானங்கள் இதுவரை செயல்படுத்தப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் உரிமை தமிழகத்திற்கா அல்லது கேரளத்திற்கா என்ற நீண்ட கால நீதிமன்றப் போராட்டத்திற்கு பின், 2014-ஆம் ஆண்டு, மே 14-ஆம் தேதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி கொள்ளலாம் எனவும், அணையைக் கண்காணிக்கவும், பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது. அந்த குழுவில் மத்திய அரசின் நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர், தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை செயலர், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத் துறைச் செயலர் ஆகியோர் இடம் பெற்றனர்.
அதன்பேரில் முதன் முறையாக உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவில், மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் என்.ஏ.வி. நாதன் தலைமையில் தமிழக அரசுப் பிரதிநிதியாக அன்றைய பொதுப்பணித் துறைச் செயலர் சாய்குமார், கேரள அரசின் பிரதிநிதியாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் குரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
35 ஆண்டுகளுக்கு பிறகு இறக்கப்பட்ட மதகு: 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை மூவர் குழுவினர் பார்வையிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பான 142 அடி நீர்மட்டம் உயர்த்துவதை அமல்படுத்த பிரதான அணையின் 13 மதகுகளை இறக்க தமிழக அரசின் பிரதிநிதி சாய்குமார் உத்தரவிட்டார். அதற்கு கேரள அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அணையின் பராமரிப்புக்காக 1979 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட 13 மதகுகளும், 35 ஆண்டுகளுக்கு பின்னர் இறக்கப்பட்டது. 
இதனால் முல்லைப்பெரியாறு மூலம் பாசன வசதி பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதே ஆண்டு, நவம்பர் 23 ஆம் தேதி அணையில் 142 அடி நீர்மட்டம் தேக்க முடிந்தது. 
2014 ஆம் ஆண்டு, நவ.23 இல் ஆய்வு நடத்திய இக்குழுவினர் 142 அடி தண்ணீர் தேக்கியும் அணை பலமாகத்தான் உள்ளது. எனவே தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ள முயற்சிகள் எடுக்கலாம் என மூவர் குழுவின் தலைவர் நாதன் தெரிவித்தார்.  
அதன்பின்னர் அணையை ஆய்வு செய்ய வருகை தரும் ஆய்வுக்குழுவினர் அணையில் ஆய்வுகளை முடித்த பின்னர் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் வல்லக்கடவு வழியாக முல்லைப்பெரியாறு அணைக்கு செல்லும் சாலையை சீரமைப்பது, அணைப் பகுதிக்கு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்வது, பிரதான அணையிலிருந்து பேபி அணைக்கு இடைப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கண்காணிப்புக்குழுவினர் நிறைவேற்றிய தீர்மானங்கள் மீது மூன்றாண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
கடந்த 19.6.2000-ஆம் ஆண்டில் அணைப் பகுதியில் உள்ள மின் வயரில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்தது. இதை ஒரு காரணமாக வைத்து இன்றுவரை 17 ஆண்டுகளாக அணைப் பகுதியில் மின்விநியோகம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதனால் வல்லக்கடவில் இருந்து, தரைவழிக் கேபிள் மூலம் மின்சாரம் அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல தமிழக அரசு, கேரள அரசுக்கு ரூ. 1.65 கோடி வழங்கியுள்ளது. ஆனால் கேரள அரசு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதனால் அணைப் பகுதியில் முக்கியப் பணிகளுக்கு  சோலார் விளக்குகளும், குறைவான திறன் கொண்ட ஜெனரேட்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்று கேரள அரசு கூறியது. அதன் பேரில் தமிழக அரசு கேரளாவுக்கு ரூ. 7.85 கோடி வழங்கியுள்ளது. ஆனால் அப்பணியையும் கேரள அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தேக்கடியில் இருந்து, அணைப் பகுதிக்கு செல்ல ரூ. 1 கோடி செலவில் தமிழ்அன்னை என்ற பெயரில் படகை வாங்கினர். இந்த படகை இயக்க கேரள அரசின், அனுமதியை எதிர்நோக்கி இயக்கப்படாமல் தேக்கடி படகுத்துறையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை (நவ. 14) ஆய்வுக்கு வரும் கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு அதிகாரிகள் அணைப்பகுதிக்கு தரைவழி மின்சாரம், தமிழ்அன்னை படகு இயக்குதல், வல்லக்கடவு முதல் பெரியாறு அணை வரை சாலையை சீரமைத்தல் போன்ற நீண்டகால கோரிக்கைகளை செயல்படுத்த  வலியுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com