இடுக்கி: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு புகலிடமாக மாறிவரும் ஏலக்காய் தோட்டங்கள்: வேலை தேடி 10 ஆயிரம் பேர் தஞ்சம்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்கு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்கு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
     மொழிவாரி மாநிலப் பிரிப்பின்போது, தமிழகப் பகுதியிலிருந்து கேரளத்துடன் சேர்க்கப்பட்ட தற்போதைய இடுக்கி மாவட்டத்துக்கு உள்பட்ட வண்டிப் பெரியார், பீர்மேடு, உடும்பஞ்சன்சோலை ஆகிய பகுதிகளில் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஏலக்காய் மற்றும் மிளகு விவசாயம் நடைபெற்று வருகிறது.
     மொழிவாரி மாநிலப் பிரிப்புக்கு முன், இப் பகுதியில் வசித்து வந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்கள், தற்போது வரை அதே பகுதியில் வசித்து வருகின்றன.      இடுக்கி மாவட்டத்தில் வசித்து வரும் தமிழர்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஏலக்காய் மற்றும் மிளகு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்கள், அந்தந்த எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
    ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்புள்ள ஏலக்காய் தோட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட கம்பம், கூடலூர், போடி, தேவாரம் ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜீப்களில் கேரளத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களுக்கு தின சம்பளமாக ஆண்களுக்கு ரூ. 450, பெண்களுக்கு ரூ. 300 வழங்கப்பட்டு வருகிறது.
     இந்த நிலையில், தற்போது இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களை நோக்கி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய  வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.     ஏலக்காய் தோட்டங்களில் தஞ்சமடையும் வடமாநிலத் தொழிலாளர்கள் எஸ்டேட்களிலேயே தங்க வைக்கப்பட்டு, தோட்டங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். இதில், குடும்பத்துடன் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
    தொடக்கத்தில் மரம் வெட்டுதல், ஏலக்காய் உலர் நிலையங்களில் தீ எரித்தல், நிலச் சீரமைப்பு போன்ற கடினப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு, ஏலக்காய் சாகுபடி தொழில்நுட்பப் பணிகளும் கற்றுத் தரப்படுகின்றன.
    வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தற்போது ஆண்களுக்கு ரூ.350, பெண்களுக்கு ரூ.250 வழங்கப்படுகிறது. ஏலக்காய் தோட்டங்களில் செடிகளுக்கு மண் அணைத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல், கவாத்து செய்தல், பழம் எடுத்தல் ஆகிய வேலைகள் செய்யும் ஆண்களுக்கு ரூ. 400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
     வட மாநிலங்களில் வேலை வாய்ப்பின்றி பஞ்சம் நிலவி வருவதால், ஏலக்காய் தோட்டங்களில் தங்கிருந்து வேலை செய்ய முன்வந்துள்ளதாக, கஜானப்பாறை பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூறினர். மேலும், ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு மற்றும் தங்குமிடம் வசதி வழங்குவதால், ஏலக்காய் தோட்டங்களில் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து வேலை செய்ய வடமாநிலத் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   தற்போது, வடமாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருவதால், ஏலக்காய் மற்றும் மிளகு தோட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஓரளவு சமாளிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com