தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி சிகிச்சைப் பிரிவு: ஆட்சியர்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனிச் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனிச் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
 தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில்  டெங்கு காய்ச்சல் அறிகுறி, டெங்கு தடுப்பு நடவடிக்கை, திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:  தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேல் காய்ச்சல் பாதிப்பு, தலைவலி, கை, கால், மூட்டு வலி, கண்களின் பின்புறம் வலி, தோலில் சிறு சிகப்பு தடிம்மன்கள் ஏற்படுவது ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள். டெங்கு அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பை கண்டறிய நவீன பரிசோதனைக் கருவி பயன்பாட்டில் உள்ளது. டெங்கு அறிகுறி உள்ளவர்களுக்கு தனி சிகிச்சைப் பிரிவு தொடங்கி, சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, ஆட்சியர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார உறுதிமொழி ஏற்றனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், பொதுச் சுகாதார துணை இயக்குநர் சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போடி: போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாவட்ட சித்த மருத்துவத் துறை,  போடிநாயக்கனூர் நகராட்சி இணைந்து நடத்திய டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமுக்கு  பள்ளித் தலைவர் எஸ்.வடமலைராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். முகாமில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியதாவது:  
டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்க மாணவர்கள் முன்வர வேண்டும். தங்கள் வீடுகளை சுத்தமாக வைப்பது மட்டுமின்றி அருகிலிருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவர்களையோ,  அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவர்களையோ நாடவேண்டும்.  போலி மருத்துவர்களிடம் செல்லக் கூடாது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.  சுய மருத்துவம் செய்யக் கூடாது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை விநியோகிக்கும் போது அதை மறுக்காமல் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக முகாமுக்கு நகராட்சி ஆணையர் மா.சுவாமிநாதன்,  பள்ளி செயலர் எஸ்.அய்யப்பராஜன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழி ஏற்று, நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேலு, தேனி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாரியப்பன், சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் முத்தமிழ்செல்வி, உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் என்.குமார், வழக்குரைஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 முகாமில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை போடி நகராட்சி சுகாதார அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com