தேனி மாவட்டத்தில் சாரல் மழை

தேனி மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (அக். 11, 12)  பரவலாக சாரல் மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (அக். 11, 12)  பரவலாக சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை சராசரியாக 17.37 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மஞ்சளாறு அணை நீர்படிப்பில் அதிக அளவாக 34 மி.மீ. மழை பெய்துள்ளது.
மற்ற பகுதிகளில் மழை அளவு:  (மி.மீட்டரில்) ஆண்டிபட்டி- 10, வைகை அணை நீர்பிடிப்பு- 23,  அரண்மனைப்புதூர்- 17.8, வீரபாண்டி- 22,  பெரியகுளம்- 29,  சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பு- 11, போடி- 11.4,  உத்தமபாளையம்- 22.8, கூடலூர்- 2, தேக்கடி- 4.4,  பெரியாறு அணை நீர்பிடிப்பு- 21 என மழை பதிவாகியிருந்தது.
அணைகளின் நீர்மட்டம்: பெரியாறு அணை நீர்மட்டம் வியாழக்கிழமை 122.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து 438 கன அடி. அணையில் நீர் இருப்பு 3,143 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 51.02 அடி. அணைக்கு நீர் வரத்து 340 கன அடி. அணையில் நீர் இருப்பு 2,128 மில்லியன் கன அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 125.95 அடி. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடி. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 111 கன அடி.
சாலையில் தேங்கும் மழை நீர்: தேனியில் வியாழக்கிழமை பெய்த மழையால், நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கம்பம் சாலை, நேரு சிலை மும்முனை சாலை சந்திப்பு, பழனிசெட்டிபட்டியில் தேனி- கம்பம் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில்  வடிந்து செல்ல வழியின்றி சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.  இதனால், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர சகதியில் சிக்கியும் அவதியடைந்தனர்.  சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு,  மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியது.
எனவே தேனியில் நெடுஞ்சாலையோர மண்மேடுகளை அகற்றி மழைநீர் சாலையில் தேங்குவதை தடுக்கவும்,  கழிவுநீர் சாக்கடைகளை தூர்வாரவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com