கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கம்பம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி அமைப்புகளில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி அமைப்புகளில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் சிறியது கம்பம் ஊராட்சி ஒன்றியம். ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி என 5 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி நிர்வாகங்கள் முல்லைப்பெரியாறு கரையோரத்தில் அமைந்தள்ளன.
  இவற்றின் குடிநீர் தேவைக்கு ஆழ்துளை உறை கிணறுகள் அமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு ஊராட்சி பகுதியில் வைப்புத்தொகை பெற்று மாதந்தோறும் குடிநீர் வரி செலுத்தும் வீடு,  வணிகப் பகுதி, தொழிற்சாலை பகுதி என எல்லாம் சேர்த்து  சுமார் 1000 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.
 அதே நேரத்தில் அனுமதி பெறாமல் சுமார் 1000 குழாய் இணைப்புகள் இருப்பதாக  கூறப்படுகிறது. இவர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு முறையான வைப்புத்தொகை, மாத குடிநீர் வரி பல ஆண்டுகளாக செலுத்துவதில்லை. ஒவ்வொரு முறையும் உள்ளாட்சி அமைப்பு தலைவர், உறுப்பினர்கள்  வரும் போது அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றன. ஊராட்சிக்கு வருவாய் என்பது குடிநீர் மற்றும் சொத்துவரி மட்டும்தான். இதனால் ஊராட்சி  நிர்வாகம் குடிநீர் விநியோகத்திற்கான மின்சார கட்டணத் தொகையை செலுத்த முடியாமல் தள்ளாடி வருகிறது.
இது பற்றி ஊராட்சி செயலர் ஒருவர் கூறும் போது, கம்பம் ஒன்றியத்தில் இது போன்ற முறைகேடுகள் கடந்த உள்ளாட்சி அமைப்பு இருந்த போது நடைபெற்றது. அதை மறைக்க அனைத்து ஊராட்சி செயலர்களும் இடம் மாற்றப்பட்டனர். இதை மாவட்ட நிர்வாகம்தான் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது பற்றி கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, இந்தப் பிரச்சனை பல ஆண்டுகளாக தவிர்க்க முடியாமல் உள்ளது, இந்த முறைகேடுகளுக்கு ஊராட்சி செயலர்களா அல்லது தலைவர்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.   
 உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகின்ற நிலையில், ஊராட்சிகளின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்த தேனி மாவட்ட ஊராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மூலம் மட்டுமே நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் ஊராட்சிகளை காப்பாற்ற முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சியில் வரி செலுத்தும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com