உத்தமபாளையத்தில் முதல் போக நெல் பயிர் விவசாயத்துக்கு நாற்றாங்கால் அமைக்கும் பணி தொடக்கம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் பகுதிகளில் முல்லைப் பெரியாறு நீர்பாசனம் மூலம் முதல் போக நெல் பயிர் விவசாயத்துக்கு நாற்றாங்கால் அமைக்கும் பணி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் பகுதிகளில் முல்லைப் பெரியாறு நீர்பாசனம் மூலம் முதல் போக நெல் பயிர் விவசாயத்துக்கு நாற்றாங்கால் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் , கம்பம், உத்தமபாளையம் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,707 ஏக்கர் பரப்பளவுக்கு இருபோக நெல் பயிர் விவசாயம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளான பருமழை குறைவாக பெய்ததால் நெல் பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டது.
ஆனாலும், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியாக இருந்ததையடுத்து, முதல் போக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதில் 60 சதவீத பரப்பளவில் மட்டுமே நெல் பயிர் விவசாயம் நடைபெற்றது. அதனால் உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர் என வீரபாண்டி வரையில் தண்ணீர் பற்றாக்குறையால் முதல் போகம் பாதிப்புக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் 2 ஆம் போக விவசாயம் முற்றிலுமாக தடைபட்டது.
இதனிடையே இந்த அண்டு அவ்வப்போது மழை பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 124 அடியை கடந்துள்ளது. தற்போது அணையிலிருந்து 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்சமயம் உத்தமபாளையம் பகுதியில் ஆழ்துளை கிணறு வைத்துள்ள சில விவசாயிகள் முதல் போக நெல் பயிர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது உத்தமபாளையம் தடுப்பு அணையிலிருந்து பாளையம் பரவு கால்வாயின் வழியாக வெற்றிலை கொடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் நாற்றாங்கால் அமைக்கும் பணி தொடக்கியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிவிவசாயிகள் கூறுகையில், முல்லைப்பெரியாற்றின் பாசனக் கால்வாய்கள் 17 உள்ளன. இதில் பாளையம் பரவு கால்வாயில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற அனைத்து கால்வாய்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் நெல் பயிர் விவசாயப் பணிகள் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com