சின்னமனூர் உடையகுளத்தில் ஆக்கிரமிப்புகளை விவசாயிகளே அகற்றினர்

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உடையகுளத்தில் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகளே ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உடையகுளத்தில் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விவசாயிகளே ஈடுபட்டனர்.
இக்குளம் 78 ஏக்கரில் அமைந்துள்ளதுடன், முல்லைப் பெரியாற்றின் பாசன நீரை இங்கு தேக்குவதன் மூலம் 2000 புஞ்சை மற்றும் 600 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பயன்பெற்று வந்தன. ஆனால் பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளாக குளத்தை பராமரிக்காததால் 50 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு விட்டதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பில் சிக்கிய குளங்களில் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் அள்ளிக் கொள்ள அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி சின்னமனூர் நன்செய் பட்டாதார் விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் உடையகுளத்தில் தேங்கிக் கிடந்த வண்டல் மண்ணை அள்ளி வந்தனர்.
அப்போது உத்தமபாளையம் பொதுப்பணித்துறையினர் இக்குளத்தில் வண்டல் மண் அள்ளக் கூடாது என்றும், குளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு பொதுப்பணித்துறை மூலம் அகற்றப்படும் என்றும் விவசாயிகளிடம் தெரிவித்ததை அடுத்து அங்கு மண் அள்ளும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் முல்லைப் பெரியாற்றிலிருந்து இக்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் தண்ணீரை தேக்கினால் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க முடியாது என்றும், எனவே குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் பணியை விவசாயிகளே மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் புகார் மனு அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள குளத்தை விவசாயிகளே மீட்டெடுக்கும் பணியை கண்காணிக்க வட்டாட்சியர் மற்றும் பொதுப் பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மீண்டும் குளத்தில் மண் அள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர். முதல்கட்டமாக குளத்தில் எடுக்கும் வண்டல் ம ண்ணை வைத்து கரையை பலத்தப்படும் பணியை 2 ஜே.சி.பி இயந்திரம் மூலம் மேற்கொண்டனர். அப்போது வட்டாட்சியர் பாலசண்முகம், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் விவசாயிகள் செயலர் நல்லையன்பெருமாள் உள்பட விவசாயிகள் பலர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com