முல்லைப் பெரியாறு அணையிலிருந்து செப்.25 இல் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டத்தில்  முதல்போக நெற்பயிர் சாகுபடிக்கு மாவட்ட  நிர்வாக உத்தரவின்பேரில்,  செப்டம்பர் 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) முல்லைப் பெரியாறு

தேனி மாவட்டத்தில்  முதல்போக நெற்பயிர் சாகுபடிக்கு மாவட்ட  நிர்வாக உத்தரவின்பேரில்,  செப்டம்பர் 25 ஆம் தேதி (திங்கள்கிழமை) முல்லைப் பெரியாறு அணையிலிருந்து  தண்ணீர்  திறக்கப்பட உள்ளதாக,  உத்தமபாளையம்  பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.  
     தேனி மாவட்டம் லோயர் கேம்ப், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,707 ஏக்கர் பரப்பளவுக்கு  இருபோக நெற்பயிர் விவசாயம் நடைபெற்றது. இதற்கு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பாசனமே முக்கிய நீராதாரமாகும். இங்குள்ள 17 கால்வாய்களில் திறக்கப்படும் பாசன நீரானது, உத்தமுத்து கால்வாய் மூலமாக கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடிப் பாசனமாகவும் மற்றும் ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட அந்தந்தப் பகுதி குளங்களில் நீர் தேக்கப்பட்டு, முறைப்பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.
     ஜூன் மாதத்தில்  முதல்போக சாகுபடியும், நவம்பர் மாதத்தில்  இரண்டாம்போக சாகுபடியும் நடைபெற்ற தேனி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாகப் பருவமழை அளவு குறைந்து பாரம்பரியமான நெற்பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் போதுமான மழை இல்லாததால், எதிர்பார்த்த அளவுக்கு அணையின் நீர்மட்டமும் உயரவில்லை.
     இதனால்,  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நெற்பயிர் விவசாயம் 4 போகங்கள்  பாதிக்கப்பட்டன.
முதல்போக சாகுபடிக்கு  தண்ணீர் திறப்பு: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியை  நெருங்கியதை அடுத்து, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முதல் போக  நெற்பயிர் சாகுபடிக்கு  விவசாயிகள்  தயாராகினர்.
இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் உத்தரவின்பேரில்,  செப்டம்பர் 25 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் தமிழக மதகுப் பகுதியிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இருப்பதாக, உத்தமபாளையம் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் (ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி):  முல்லைப் பெரியாறு அணை- 124.70 அடி , நீர் இருப்பு 3,559 மில்லியன் கன அடி, நீர் வரத்து 1,135 கன அடி, நீர் வெளியேற்றம் 218 கன அடி.
வைகை அணை- 36.81 அடி, நீர் இருப்பு- 717 மில்லியன் கன அடி, நீர் வரத்து 177 கன அடி, வெளியேற்றம் 40 கன அடி.
சோத்துப்பாறை அணை- 126.53 அடி, நீர் இருப்பு -100.44 மில்லியன் கன அடி, நீர் வரத்து 110 கன அடி, வெளியேற்றம் 100 கன அடி.
மஞ்சளாறு அணை- 54.95 அடி, நீர் இருப்பு - 434.40 மில்லியன் கனஅடி, நீர் வரத்து 82 கன அடி, வெளியேற்றம் - இல்லை.
சண்முகா நதி அணை- 20.95 அடி, நீர் இருப்பு - 8.03 மில்லியன் கன அடி, நீர் வரத்து இல்லை , வெளியேற்றமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com